Pollachi Jayam Patti attained the lotus feet of Sri Maha Periyava on July 12th 2014 on Guru Poornima Day ! “Gurunatha… Gurunatha…” is the last word she uttered. Her experiences with Sri MahaPeriyava is truly a Pokkisham. Here is Patti’s Son Sri Chandrasekar sharing some gems from the treasure box.
Rathinam – 2
1963 என்று நினைக்கிறேன். பொள்ளாச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். தந்தைக்கு இண்டியன் பேங்கில் உத்யோகம். ஒரு மாதத்தில் பதினைந்து நாட்களாவது அம்மா பெரியவாள் தரிசனத்திற்குப் போய்விடுவாள். அந்தக் காலகட்டத்தில் ஜயலக்ஷ்மி எனறு பெயர் கொண்ட நான்கைந்து பெண்மணிகள் அடிக்கடி மடத்திற்கு வருவார்கள். அம்மா பொள்ளாச்சியில் இருந்ததால் (சில ஆண்டுகள்தான்) பொள்ளாச்சி ஜயம் என்று அடையாளத்திற்காக அழைக்கப்பட்டாள். இந்த பெயர் கடைசிவரை நின்றுவிட்டது.
ஒரு நாள் இளையாத்தங்குடியில் தரிசனம். பெரியவாள் பூஜையில் இருந்தார். பெரியவாள் பூஜை செய்வது அப்படி ஒரு அழகு. பூஜையின் பொழுது திரும்பிப் பார்த்தாரென்றால், அங்கு அமர்ந்திருக்கும் அவ்வளவு பேருக்கும் தன்னைப் பார்ப்பதுபோல் இருக்கும். பூஜை விமானம் கிழக்கு நோக்கியிருக்கும். பெரியவாள் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை. விமானத்திற்கு இரண்டு அடிகள் தள்ளி ஒரு உத்திரம். பூஜையின்போது நிர்மால்ய சந்தனத்தை சிறியதாக உருட்டி லாவஹமாக அந்த உத்திரத்தின் மேல் தூக்கிப் போடுவார். சந்தனம் உத்திரத்தில் ஒட்டிக்கொள்ளும்.
பூஜையின் பொழுது அம்மா பதினைந்து அல்லது இருபது வரிசைகள் தள்ளி தனியாக அமர்ந்திருந்தாள். இந்தக்காலம் போல் அப்பொழுதெல்லாம் படங்கள் அதிகம் கிடையாது. Very few of them would be in circulation. ஒருவர் பெரியவா படம் ஒன்றை வைத்துக்கொண்டு. சிலரிடம் காட்டிக்கொண்டிருந்தார். அம்மா அவரை அழைத்து படத்தைக் காட்டும்படி கேட்டாள். அவர் என்ன மூடில் இருந்தாரோ. முடியாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அம்மாவிற்கு ஒரே வருத்தம். கண்ணில் ஜலமே வந்துவிட்டது. பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் ஒரு அதிசயம் நடக்கவேண்டுமே. அழுத பிள்ளைதானே பால் குடிக்கும். வருத்தத்துடன் அம்மா பெரியவாளைப் பார்த்தாள். அதே சமயத்தில் நிர்மால்ய சந்தனத்தை உருட்டி வழக்கம்போல் பெரியவா உத்திரத்தின்மேல் போட்டார். உத்திரத்தின் மேல் வடக்கு நோக்கி சந்தனத்தை எறிகிறார். அம்மா கிழக்குப்பக்கம் பதினைந்து வரிசைக்கு அப்பால் அமர்ந்திருக்கிறாள். லலிதா ஸஹஸ்ர நாமம் சொல்லி முடித்துவிட்டு புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டிருக்கிறாள். கருப்பு அட்டை காலிகோ பைண்டிங்க். பெரியவா சந்தனத்தை எறிந்த அதே சமயம் அம்மா மடியில் ஏதோ விழுந்தது போல் தோன்றியது. என்ன என்று பார்த்தால், கருப்பு அட்டையின் மேல் ஈரச்சந்தனம். அருகில் எடுத்துப் பார்த்தபோது சந்தனத்தில் பெரியவா முகம். ஆஹா ! படம் கிடைத்து விட்டதே ! எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டம். அறையில் வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
மாலை வேளையில் பெரியவாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியில் வந்து அமர்ந்தார். எங்கு அமர்வார் என்று சொல்லமுடியாது. மாட்டுக்கொட்டாய், மரத்தடி, பக்கத்திலிருக்கும் கோவில், எதிரிலிருக்கும் குளக்கரை எங்கு வேண்டுமானாலும் உட்காருவார். அன்றையதினம் குளக்கரை. சுற்றிலும் நான்கைந்து பேர். அம்மா மெள்ள பெரியவா அருகில் சென்றாள். பெரியவா திரும்பிப்பார்த்து, தீர்க்கமான பார்வையுடன், “என்ன” என்று கேட்டார். ஒவ்வொரு சமயம் பெரியவா என்ன என்று கேட்கும்போது, “நீ என்ன கேட்கப்போறேன்னு தெரியும்” என்று சொல்வது போல் இருக்கும். இது அனுபவித்தவர்களுக்குதான் புரியும்.
பெரியவா என்ன என்று கேட்டவுடன், அம்மா புத்தகத்தைக் காட்டி சந்தனம் விழுந்ததும் அதில் பெரியவா முகம் தெரிந்ததையும் சொன்னாள். ” ஓஹோ ! அப்படியா ? அதை தலை கீழாக திருப்பிப்பார். “. என்று சொன்னார்.
அம்மா அதை தலை கீழாக திருப்பிப் பார்த்தாள். என்ன ஆச்சர்யம் ! தலை கீழாக பார்த்த போதும் அதில் அதே பெரியவா முகம். சுற்றி நின்றுகொண்டிருந்த அனைவரும் ஒரே குரலில் “சர்வேச்வரா” என்று சாஷ்டாங்கமாக விழுந்தனர்.
ஹர ஹர சங்கர
Sri Chandrasekar’s Experience with Sri MahaPeriyava can be viewed here:
Pollachi Jayam Patti’s Videos can be viewed here.
Hari OM
Very nice to read and hear such great experiences from Mahaperiayava devotees..
Jaya Jaya Sankara Hara Hara Sankara
இன்னும் கொஞ்சம் மகா பெரியவா கதை சொல்லுவாரோ என்ற நப்பாசையில் ரத்தினம்-2 வில் வேறு ஒரு வீடியோ இருக்குமோ என்று பார்த்தேன்… குறை கூறவில்லை, அவ்வளவு இனிமையாக உள்ளது, அதனால் இன்னும் கொஞ்சம் கேட்க தோன்றுகிறது. தங்கள் மகத்தான பணிக்கு நன்றி, நமஸ்காரம்.