உங்களுக்குத் தெரியாத விஷயம் சொல்கிறேன்: ‘சிவ என்கிறதில் முதல் அக்ஷரமான ‘சி’யில் ‘இ’காரம் இருக்கிறதல்லவா? ‘ச்’என்ற மெய்யெழுத்தோடு இந்த உயிரெழுத்தான ‘இ’ சேர்ந்துதானே ‘சி’ஆகியிருக்கிறது? இந்த ‘இ’, ‘ஈ’என்பதே அம்பாள் பேர்தான் மெய்யெழுத்துக்கள் சிவ அக்ஷரங்கள், உயிரெழுத்துக்கள் சக்தி அக்ஷரங்கள் என்று பொதுவிதி.
புருஷப் பெயர்களில் ‘அ’காரத்தில் முடிவதே ஜாஸ்தி இருக்கின்றன – சங்கர, நாராயண, ராம, க்ருஷ்ண, ஸுப்ரஹ்மண்ய, கணேச என்ற மாதிரி.
வெள்ளைக்காரர் பெயர்களிலும் பொம்மனாட்டிகளுக்கு மேரி, லூஸி, அன்னி, ஜூலி என்று ‘இ’காரப் பெயர்கள் நிறைய இருக்கின்றன.
‘சிவ’வுக்கு ‘சிவாநி’மட்டுந்தான் பெண்பால் என்றில்லை;’சிவா’என்றாலும் சிவ பத்னிதான். சிவன்-ஸ்வாமி, சிவா-அம்பாள். இப்படியே ராம-ராமா, க்ருஷ்ண-க்ருஷ்ணா. அதாவது அகராந்தப் புருஷப் பெயர் ஸ்த்ரீ பெயராகும்போது ஒன்று, ‘இ’ஆகிறது;இல்லாவிட்டால் ‘ஆ’ ஆகிறது. ‘ராம’ஆகாரமாக ‘ராமா’என்று ஆனாலும் ‘அபிராம’என்பது இகாரமாக அபிராமி என்று ஆகியிருக்கிறது.
‘இ-ஈ’க்களைப் போலவே ‘ஆ’வில் முடிவதாகவும் நிறையப் பெண்பால் பெயர்கள் இருக்கின்றன – உமா, ரமா, துர்கா, பாலா, லலிதா, சாரதா.
‘ஆ’காரம் ஸ்த்ரீ நாமங்களுக்கு மட்டுமே ஆனது. [சிரித்து]எக்ஸ்க்ளூஸிவ்! ‘ஆ’வில் முடியும் புருஷப் பேரே கிடையாது.
அந்நிய தேசங்களிலும் டயானா, ஜூலியானா, ஃபாதிமா, கதிஜா என்று ஸ்த்ரீகளின் பெயர்கள் ‘ஆ’வில் முடிவதாக நிறைய இருக்கின்றன. வெள்ளைக்கார ஸ்த்ரீ-புருஷப் பெயர்கள் பல தினுஸாக முடிகின்றன. ஆனால் அங்கேயும் ஒரு புருஷப் பெயரை ஸ்த்ரீ பெயராக்கும்போது ‘ஆ’காரமாக்கியே முடிக்கிறார்கள் – அலெக்ஸாண்டர்:புருஷப் பெயர்;அதையே பொம்மனாட்டிப் பேராக்கும் போது அலெக்ஸான்ட்ரா;விக்டர்-விக்டோரியா. நம்மில் அடியோடு ‘ஆ’காரந்தமாகப் புருஷப் பேரே இல்லையென்றால் அங்கேயும் அபூர்வமாகவே ஜோஷ§வா, ஜெரிமியா மாதிரி ஒன்று இரண்டு தவிர ‘ஆ’வில் முடியும் புருஷப் பெயரில்லை.
[முன்னேயே]சொன்னாற்போல் ‘அ’காரத்தில் முடியும் ஸ்த்ரீலிங்கப் பெயரும் இல்லை. ‘ஆ’காரத்தில் முடியும் புல்லிங்கப் பெயரும் இல்லை. இ-ஈ இரண்டிலும் முடிவதாக ஸ்த்ரீலிங்கப் பெயர்களே அதிகம் இருக்கின்றன.
புருஷர்கள்தான் ஸ்த்ரீகளைவிட நெட்டையாக இருப்பவர்கள். ஆனாலும் ஆனா ஆவன்னாவை எடுத்துக் கொண்டாலோ குட்டை [குறில்]அகாராந்தமே புருஷர்களுக்கு, நெட்டை [நெடில்] ஆகாராந்தம் ஸ்த்ரீகளுக்கு என்று இருக்கிறது. இங்கே ஸ்த்ரீகளைத்தான் புருஷர்களை விட [சிரித்து] ‘உயர்த்தி’ச் சொல்லியிருக்கிறது!
குட்டை நெட்டை இ-ஈ இரண்டுமே ஸ்த்ரீ பெயர் முடிவுகளில் அதிகம் இருக்கின்றன.
‘சக்தி’என்பதே ‘இ’யில் முடிவதுதான்!’தேவீ’, ‘ஈச்வரீ’என்பவை ‘ஈ’யில் முடிகின்றன. ‘அம்பா’வும் ‘அம்பிகா’வும் ‘ஆ’வில் முடிகின்றன.
‘சிவ’என்கிறபோது முதல் எழுத்தான ‘சி’யிலேயே அம்பாள் ‘இ’காரமாகப் பிரிவற ஒட்டிக்கொண்டு உயிர் தருகிறாளென்று சொல்ல வந்தேன்.
‘சிவ’த்தில் இந்த ‘இ’போய்விட்டால் என்ன ஆகும்?புருஷப் பெயராச்சே என்று இகாரத்தை அகாரமாக்கினால் என்ன ஆகும்?பரம மங்களமான சிவ நாமாவே பரம அமங்களத்தைக் குறிப்பதாகிவிடும்! ‘சி’யிலிருந்து ‘இ’யை மைனஸ் பண்ணினால் அது ‘ச’ என்றுதானே ஆகும்? அப்போது ‘சிவம்’?’சவம்’என்றல்லவா ஆகிவிடும்? ‘இ’என்ற உயிரெழுத்துதான் ஈச்வரனுக்கே ஜீவனை உயிரைத் தருகிறது. இது போனால் உயிர் போன சவம்தான்!
சக்தி இல்லாவிட்டால் சிவம் சவம் என்றால் என்ன அர்த்தம் [சிரித்து] யசமானியம்மாள் இல்லாமல் ஐயாவுக்குச் செயலே இல்லை என்று அர்த்தம்! பேச்சு வழக்கைக்கூடச் சொன்னேனே, ”உனக்குப் இதைப் பண்ண சக்தி இருந்தா பண்ணு!இல்லாட்டா சிவனேன்னு கிட”என்கிறோம்!செயல் புரியும் திறமை இருந்தால் ‘சக்தி’; ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் ‘சிவனே’என்று!இதிலிருந்து அவளின்றி அவனுக்குச் செயலில்லை என்று ஆகிறதல்லவா?யாரானாலும் தங்களுடைய சக்தி ( energy ) போய்விட்டால் ஒன்றும் செய்யத்தானே முடியாது?ப்ரஹ்மமாகிற சிவத்துக்கும் அதன் சக்தி இல்லாவிட்டால் இப்படித்தானே இருக்கவேண்டும்?
Article Courtesy: Deivathin Kural Volume 6 – சிவத்துக்கும் ஜீவசக்தி;ஆண்-பெண் பெயர்கள் – Kamakoti.Org
Thank you very much to bring this. I really enjoyed it.
Great exposition.This is definitely a divine vaku.