“பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை”
(‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’)
ஒவ்வொரு வருடமும் மே மாதம் நெருங்க நெருங்க எனக்குள் ஒரு விதமான பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்வது வழக்கம். எனக்கு மட்டுமல்ல… என் குடும்பத்தார் அத்தனை பேருக்கும்!
காஞ்சி முனிவர் மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ‘ஜெயந்தி’ (பிறந்த தினம்) வருவது அந்த மாதத்தில்தான். அந்த நாளின் போது, நான், என் மனைவி நாகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முழுவதுமாக காஞ்சிபுரத்துக்குச் சென்று, ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து, லட்டுகள் செய்து, கூடையில் சுமந்து கொண்டுபோய் மடத்தில் ஒப்படைப்போம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சி.
இந்த சாதாரண சமையல்காரன், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழந்து ‘இதோடு எல்லாம் போதும்’ என்று விபரீதமான முடிவு எடுக்க இருந்த சமயத்தில், நம்பிக்கை கொடுத்து, “நீ நன்றாகத்தான் இருப்பாய்’ என்று அபயக்கரம் நீட்டிய அந்தமாமுனிவருக்கு நான் செலுத்தி வரும் காணிக்கை இது.கொஞ்சம் முழுசாகச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்.
எனக்கு ஏழு வயதாயிருக்கும்போது சங்கர மடம் கும்பகோணத்தில் இயங்கி வந்தது. மஹா பெரியவாள் அங்குதான் இருந்தார். தினந்தோறும் மதியம் பன்னிரண்டு மணி தொடங்கி நாலுமணிவரையில் அன்னதானம் ஜேஜேவென்று அங்கே நடக்கும். இதற்காக மூட்டை மூட்டையாக அரிசி வந்து குவியும். மடத்தில் அப்போது பெரிய சமையல்காரர் — கபிஸ்தலம் வெங்கட்ராமய்யர். அவருக்கு உதவியாக என் அப்பா (விக்கிரபாண்டியம் நாராயணசாமி அய்யர்) உட்பட நாலைந்து பேர் இருந்தனர். என்னைப் போல் சின்னப் பையன்கள் நிறையப் பேர் எடுபிடிகளாக இருந்தோம்.
ஒவ்வொரு பந்திக்கும் சாப்பாடு முடிந்ததும் அந்த இலைகளை அள்ளி எடுத்து மூங்கில் கூடைகளில் நிரப்பி எடுபிடி பையன்களில் தோளில் வைப்பார்கள். படுவெயிட்டாக இருக்கும். இரண்டு கைகளால் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஓடும்போது, கூடைக்குள்ளிருந்து மிச்சம் மீதி சாம்பார், ரசம், பாயசமெல்லாம் காதோரமாகக் கொட்டி தோளெல்லாம் வழியும். அதைத் துடைப்பதற்கு முடியாமல் அப்படியே தலையை ஒடித்துக் கன்னத்தால் தேய்த்து விட்டுக் கொள்கிறபோது அது வாயில்பட்டு நாக்கில் ருசிக்கும். ‘எச்சில்’ என்று தோன்றாது. பெரியவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி, இறைவனால் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியாகத் தான் அது தோன்றும் என்பதால் துளிகூட அருவருப்பு இருக்காது எங்களுக்கு!
இப்படி இலைக்கூடையைக் கொண்டுபோய் கொட்டிய கையோடு, காவிரியில் குளித்துவிட்டு தயாராக வந்து நிற்க வேண்டும், அடுத்த பந்தியின் இலையை எடுப்பதற்கு!
சங்கர மடத்துக்கு இணையாக விசேஷ நாட்களில் தெய்வப்பெருமாள் நல்லூர் அன்னதான சிவன் என்பவரும் தனியாக அன்னதானம் செய்வார். இத்தனைக்கும் சாதாரண சமையல்காரர்தான். அதென்னவோ அவருக்குள் ஒரு வெறி. தானே கடை கடையாக ஏறி இறங்கி, வியாபாரிகளிடம் மன்றாடி அரிசி, பருப்பு என்று தானம் வாங்கி வந்து ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துவார்.
‘மடத்துக்குப் போட்டியாக அவர் அப்படிச் செய்கிறார்’ என்று ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும், மஹா பெரியவருக்கு இதில் சந்தோஷம்தான். தன்னை தரிசிப்பதற்கு அன்னதான சிவன் வரும்போது, சிரித்துக் கொண்டே, ‘என்ன சிவன், இன்னிக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டாய் ?’ என்று பெரியவர் கேட்பார்.
‘இன்னிக்கும் நிறையப் பேருக்குப் போட்டேன்!’ என்று சிவனும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்வார். (இந்த அன்னதான சிவன் பேரிலேயே பெரிய கமிட்டி போட்டு, பல பெரிய மனிதர்கள் சேர்ந்து ‘டிரஸ்ட்’ டாகத் தொடர்ந்து அன்னதானப் பணியைச் செய்துகொண்டு இருந்தார்கள். அந்த ‘டிரஸ்ட்’ இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை).
இந்த மாதிரியான கலகலப்பான சூழல்களைவிட்டு என் வாழ்க்கை அப்படியும் இப்படியும் திசை மாறியது. திருமணமாகி என் மனைவியோடு சென்னையில் வசிக்க ஆரம்பித்தபோது எனக்கு வயது இருபத்து மூன்று. ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. என் வாழ்க்கையில் அதுபோல் கடினமான ஒரு கட்டத்தை நான் அனுபவித்ததில்லை. வறுமை எங்களைப் பிடுங்கித் தின்றது.
‘வேண்டாம்….இதற்கு மேலும் நம்மால் வாழ்வது என்பது முடியாது. வறுமையை எதிர்த்துப் போராடுவது இனி நடக்காத காரியம்!’ என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.
இடையில் இத்தனை வருஷம் ‘டச்’ விட்டுப் போயிருந்த மடத்துக்கு ஒரே ஒரு முறை போய், மஹா பெரியவரைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். இப்போது மடம் காஞ்சிபுரத்தில் இருந்தது.
காஞ்சிக்குப் போனேன். பெரியவரை தரிசனம் செய்தேன். என் மனசு கலக்கத்தைப் பட்டும்படாமல் அவரிடம் சொன்னேன்.
எல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘சரி! இன்று நீயும் உன் மனைவியும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே தூங்குங்கள். நாளை போய்க் கொள்ளலாம்!’ என்று என்னிடம் காஞ்சிப் பெரியவர் சொல்ல…. கட்டிக்கொள்ள மாற்றுத்துணிக்கூட எங்களிடம் இல்லையே என்ற வேதனைக் குமுறலுடன் அன்று காஞ்சி மடத்திலேயே தூங்கினோம். பகவான் பாதத்தில் படுத்திருக்கிறபோது மனம் துக்கங்களை மறந்திருப்பதால், தூக்கம் நன்றாக வந்தது.
காலையில் எழுந்து குளித்துப் பெரியவரைத் தரிசனம் செய்யப் போய் நின்றோம். புது வேட்டியும், புதுப் புடவையும் எடுத்து வரச் சொல்லி, அதை எங்களிடம் கொடுத்து உடுத்திக்கொண்டு வரச் சொன்னார்.
உடுத்திக்கொண்டு போய் நமஸ்கரித்ததும், எதிரில் மூங்கில் தட்டிலிருந்த பதினோரு ரூபாய் பணத்தை எடுத்து எங்களிடம் கொடுக்கச் சொன்னார். ‘போ! எல்லாம் சரியாயிடும்! ‘ என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். என்னுள் புது நம்பிக்கை துளிர் விட்டது. ‘வறுமையை எதிர்த்துப் போராடலாம். தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’ என்ற உறுதி பிறந்தது.
அன்றிலிருந்துதான் என்னைப் பற்றியிருந்த வறுமை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது. கல்யாண வேலைக்குக் கூப்பிட்டு, மெள்ள மெள்ள ஆள் வர ஆரம்பித்தனர். அன்றாட ஜீவனத்துக்குக் காசு புழங்க ஆரம்பித்தது.
அதன் பின் மாதா மாதம் முதல் தேதியன்று மடத்துக்குப் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒரு முதல் தேதியன்று அப்படிப்போய் நமஸ்கரித்தபோது, ‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’ என்றார் பெரியவர்.
வீட்டுக்கு வந்து என்னதான் பிராய்ந்து பார்த்தும் சல்லிக்காசு இல்லை. என் மனைவி நாகலட்சுமியைப் பார்த்தேன். காதில் தோடு தெரிந்தது. அதை விற்று லட்டு செய்து (சுமார் நூறு கூட இருக்காது) கொண்டு போனேன். பெரியவர் முன் வைத்து வணங்கியதும்……
‘என்ன…. லட்டு செய்ய முடிஞ்சுதா? ரொம்பத்தான் கஷ்டப்பட்டு செஞ்சுண்டு வந்தே போலிருக்கே!’ என்றார் மெலிதான புன்னகையுடன்.
என்னால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. ‘நம் கஷ்டம் தெய்வம் வரை போனதே…. அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் பெரியவரின் ஜெயந்தி (பிறந்த நாள்) அன்று லட்டு செய்து கொண்டு போவதை நானே வழக்கமாக்கிக் கொண்டேன். லட்டுகள் நூறு ஐந்நூறு ஆனது….ஐந்நூறு ஆயிரம் ஆனது… இன்று எங்கள் குடும்பம் முழுவதும் மே மாதத்தில் பெரியவர் ஜெயந்தி வந்தால், அந்தப் புனிதமான நாளில் லட்டு செய்ய காஞ்சிபுரம் கிளம்பிவிடும்.
Article Courtesy: Thanks to Balhanuman’s Blog
Greatly Blessed person Sri Arusuvai Natarajan! Maha Periyava showered His abundant Blessings on him and made him prosperous. His Bhakthi continues to guide him! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!
தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது. வெற்றி நிச்சயம் கிடைக்கும்’
Hara hara shankara jaya jaya shankara Periyava thiruvadigal charanam
when god himself was in our midst many people out of ignorance or false pride or short sighted rationalism failed to receive his blessings/ they have ensured for themselves another or many more births what a pity,
Jaya jaya Sankara hara hara Sankara. MahaPeriyava sarvagyan,sarvavyapy,karunamurthy.
Jaya jaya shankara hara sankara .My nameskarm