“வேதோ (அ) கிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத்விதாம்
ஆசாரச்சைவ ஸாதூநாம் ஆத்மநஸ்துஷ்டிரேவ ச ”
என்று தர்ம ப்ரமாணங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக, முதலில் வேதம், அப்புறம் தர்ம சாஸ்த்ரம். அப்புறம் ஸத்துக்களின் நடவடிக்கை, கடைசியாக நம் மனஸுக்கே, ‘ஸரியாய்த்தாண்டாப்பா பண்ணியிருக்கோம்’என்று த்ருப்தி உண்டாக்கும் சொந்த அபிப்ராயம் என்று வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறார். ரூபத்தை அறிய நம்முடைய கண் ப்ரமாணமாயிருக்கிறது. சப்தத்தை அறியக் காது ப்ரமாணம். தர்மத்தை அறிய?அது நம் இந்த்ரியத்துக்கு அகப்படுமா?அகப்படாது. அதனால் ச்ருதிதான் ப்ரமாணம். தர்மாதர்மங்களை அறிய வேதத்தைப் பார்த்து அந்தப்படிதான் பண்ணணும். ஸரி, வேதத்தில் நாம் தேடுகிற தர்ம விஷயம் அகப்படவில்லையென்றால்?அப்போது அடுத்த அதாரிடியான ஸ்ம்ருதியை பார். ச்ருதி, ஸ்ம்ருதி இரண்டிலும் முடிவு தெரியாவிட்டால்?இம்மாதிரி விஷயத்தில் ஸதாசார ஸம்பன்னர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதுவே ப்ரமாணம் என்று எடுத்துக்கொள். அவர்களும் இந்த விஷயத்தில் ப்ரவேசிக்கவில்லை, எதுவும் சொல்லவில்லை, செய்யவில்லை என்றால் என்ன செய்ய? ஸரி, உன் மனஸை நடுநிலையாய், நிஷ்பக்ஷபாதமாய் வைத்துக்கொண்டு அதற்கு என்ன தோன்றுகிறது என்று பார். ஸொந்த த்வேஷாபிமானங்கள் கலக்காமல் சுத்தமாக ஒரு அபிப்ராயத்துக்கு வா. உனக்குக் கொஞ்சங்கூட உறுத்தலில்லாமல் அது த்ருப்தி தரணும். அப்போது, ‘வேறே வழியில்லாமல் இதோ என் அந்தஃகரண சுத்தமாக இப்படித் தோன்றுவதே ஸரி என்று அநுஸரிக்கிறேன்’என்று அப்படிப் பண்ணிவிட்டுப் போ. அதாவது உன்னுடைய அந்தஃகரணமே வேறொரு ப்ரமாணமுமில்லாதபோது ப்ரமாணம் என்று, பண்ணிவிட்டுப்போ!- இப்படி மநு சொல்கிறார்.
Article Courtesy: தெய்வத்தின் குரல் – Voice Of God
“Voice Of God” Excerpt Can Be Read at: www.Kamakoti.Org
Leave a Comment