A Tribute To Dr Sundararaman (That Son of Duraiswamy)
By Sri Karthi Nagaratnam
நான் சொல்றேன், நீ பிச்சை எடுக்கல்லே! ஒனக்காக நான் பிச்சை எடுத்தேன்…
அன்று இரவு ரயிலிலேயே காஞ்சீபுரம் புறப்பட்டேன். மறுநாள் காலை பெரியவா தன்னுடைய அனுஷ்டானங்களையெல்லாம் முடிக்கும் வரைக் காத்திருந்துவிட்டு அவர் முன் போய் நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றேன்.
அவர் என்னைப் பார்த்த பொழுது, நான் ஒன்றும் சொல்லவில்லை.
அவர்தான் முதலில் பேச வேண்டும் என்று நினைத்தேன். சில நிமிஷங்கள் மௌனமாக இருந்துவிட்டு சொன்னார், “வாரத்தில ஒரு நாள் தவிர மத்த நாள்களுக்கெல்லாம் உனக்குத் தங்க இடமும், சாப்பாடும் ஏற்பாடு ஆயிடுத்து இல்லே?
இப்பொழுதும் நான் ஒன்றும் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன்.
மறுபடியும் சில நிமிஷங்கள் மௌனம்.
“ஒனக்கு நா செஞ்சிருக்கற ஏற்பாடு அவ்வளவா இஷ்டமில்ல போலன்னா இருக்கு?”
மறுபடி நான் மௌனம் சாதித்தேன்.
“இந்த அனுபவம் உன்னைக் கேவலப்படுத்தும்னு நீ நினைக்கறயோ என்னவோ? அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. ஒன்னப் பாக்க வந்த ஒவ்வொருத்தரும் என்னுடைய பரம பக்தாள். அவா வீட்டுல உனக்கு ராஜோபசாரம் நடக்கும்.”
என் மௌனத்தைத் தொடர்ந்தேன்.
“நீ தமிழ்ல ஒரு நிபுணன் ஆச்சே! ஔவைப்பாட்டி சொன்னது ஒனக்குத் தெரிஞ்சிருக்கணுமே? ‘பிச்சை எடுத்தாலும் கல்வி கற்பது நன்று’ அப்படின்னு சொல்லியிருக்கா.
என்னுடைய ஏற்பாடு பிச்சை எடுப்பது போலன்னு ஒனக்குத் தோணித்துன்னா அதுதான் ஒம்மனசை சஞ்சலப்படுத்தறதுன்னா, நான் சொல்றேன், நீ பிச்சை எடுக்கல்லே! ஒனக்காக நான் பிச்சை எடுத்தேன்.”
என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது! நான் பெரியவாளைப் பார்க்கப் போனபொழுது இந்த ஏற்பாடு என்னை இழிவுபடுத்துவதாக இருக்கும் என்று நான் நினைத்ததால் இதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று நிச்சயம் செய்யவில்லை.
அந்த தெய்வம், “நீ பிச்சையெடுக்கல நான்தான் உனக்காகப் பிச்சையெடுத்தேன்” என்று சொன்ன போது என்னிடம் இருந்த அஹங்காரம் ‘நான்’ என்ற நினைப்பு எல்லாம் அந்தக் கணமே ஆவியாகிப் பறந்தது. அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, “நீங்க செஞ்சிருக்கற ஏற்பாட்டை நான் ஏத்துக்கறேன்” என்றேன். மீதி இருந்த இன்னும் ஒரு நாளைக்காக அந்த என் தெய்வம் மறுபடியும் பிச்சை
எடுக்கலாகாது என்று முடிவு செய்து, ‘இன்னும் ஒரு நாளைக்கு என்னோட அக்கா வீட்டிலேயே தங்கிக்கறேன்’ என்றேன்.
மேலும் ஒரு நிமிஷங்கூட அவருக்கு முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. என்னுடைய உணர்ச்சிகள் கட்டுக்க்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. நான் புறப்பட்டேன்.
மறுபடியும் என்னை அழைத்து, “எனக்காக நீ இந்த ஏற்பாட்டை ஏத்துக்கறயா, இல்லேன்னா எப்படியாவது ஒன்னோட படிப்பை முடிக்கணும்கறத்துக்காகவா?” என்றார்.
“ரெண்டுக்குமேதான்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
அன்றிலிருந்து பெரியவாளை எனக்காக எதற்கும் தொந்தரவு செய்வதில்லை என்று முடிவு செய்தேன். என்னுடைய பிரார்த்தனையின் போதுகூட எனக்காகவோ என் குடும்பத்துக்காகவோ எந்த ஒன்றையும் நான் வேண்டவில்லை. டி.குளத்தூரிலே சின்னப் பையனாக இருந்தபோதே அவர் என்னை அனுக்ர்ஹித்திருக்கிறார் என்று இப்பொழுது நிச்சயமாக நம்பினேன்.
ஓரிக்கை கிராமத்தில் எனக்கு விஸ்வரூப தரிசனம் தந்திருக்கிறார்.
பாலாற்றங்கரையில் கீதோபதேசம் தந்தார்.
இப்போ எனக்காக பிச்சை எடுத்திருக்கிறார்.
இதில் எதையும் என்னால் எப்படி மறக்க முடியும்?
~ நான் கடவுளுடன் வாழ்ந்தேன் புத்தகத்தில் இருந்து சில துளிகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கச்சூர் என்ற தலத்திற்கு அடியார் குழாமுடன் இரவு வெகு நேரம் கழித்து வருகிறார். அடியார்களுக்கோ நல்ல பசி, தன் உயிர் தோழனாம் சிவனை பார்க்கும் ஆசையில் வழியில் எங்கும் முகாமிடவில்லை சுந்தரர்.
உணவுக்கு என்ன செய்வது? ஐயனிடமே முறையிட்டார் தம்பிரான் தோழர்.
ஐயன் திருவாய் மலர்ந்தார். ‘இப்படி நேரம் கழித்து வந்தால் என்ன செய்வது?’
‘என்ன செய்வதா? உன்னை பார்க்க, உன்னை நம்பித்தானே வந்தோம்? என்ன வேண்டுமானாலும் செய், அடியார்களுக்கு உணவு வேண்டும். வழி செய்’.
ஐயன் சிறிதும் யோசிக்க வில்லை.
திருக்கச்சூர் வீதிகளில் இறங்கி பிச்சை எடுத்தார், வீடு வீடாக சென்று. (எழுதும்போதே என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை).
அத்தனை வீட்டிலும் சேகரித்த உணவுடன் தன் தோழன் முன் தோன்றினார்.
‘என்ன செய்தாய்?’
‘நீ என் உயிர். உன் பொருட்டு, பல வீதிகள், பல இல்லங்களில் பிச்சை எடுத்து உணவு சேகரித்தேன்’.
‘ஐயனே, ஐயனே, இந்த மீளா அடிமை பொருட்டு நீவீர் பிச்சை எடுக்கலாமா? என்ன காரியம் செய்தீர்?’
‘உமக்காக எதையும் செய்வோம், உம் அன்பே பிரதானம் எமக்கு’ என்றார் ஐயன்.
குறிப்பு:- பெரியபுராணம் செயற்முறை விளக்கம் செய்யத்தான் நவீன கால சுந்தரரும்(சுந்தர ராமனும்), ப்ரத்யக்ஷ பரமேஸ்வரர் ஸ்ரீ சந்திர சேகரனும் இப்படி செய்தார்கள் போல…
வன்தொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர் அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி அருள்கூரச் செப்புவார்.
மெய்ப்பசியால் மிகவருந்தி இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்
அப்புறநீர் அகலாதே சிறிதுபொழு தமருமெனச்
செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறும் சென்றிரப்பார்.
வெண்திருநீற் றணிதிகழ விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக் கடும்பகற்போ திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல் பொருந்தமனை தொறும்புக்குக்
கொண்டுதாம் விரும்பியாட் கொண்டவர்முன் கொடுவந்தார்.
– பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான்
இதில் எதையும் என்னால் எப்படி மறக்க முடியும்? – முடியாது தான் மாமா. சத்தியமாய் முடியாது. எங்களாலேயே மறக்க முடியாமல் நித்தம் நித்தம் நாமும் ஒரு சுந்தர ராமன் மாமா போல, ஒரு பொள்ளாச்சி ஜெயம் பாட்டி போல ஆகமாட்டோமா என்று திக்குமுக்காடி வருகிறோமே, ஐயன் நினைவுகளில், தங்களால் எப்படி மறக்க முடியும்?
இனி நீங்கள் மறக்கவே வேண்டாம், ஐயனிடமே தான் சென்று விட்டீர்களே, அவரைத் தவிர இனி உங்களுக்கு வேறு என்ன? ஐயனோடு இரண்டறக் கலந்தபின் நீங்களும் அவரும் வேறு வேறா என்ன?
ஐயனிடம் தெரிவியுங்கள், சிபாரிசு செய்யுங்கள், இந்த சிறியோங்களையும் ஏற்றருள வேண்டும் என்று.
ஐயன் நிச்சயம் செவி சாய்ப்பார், தங்கள் போன்ற உத்தம உன்னத அடியார் சொல்லுக்கு…
பக்திக் கண்ணீருடன்…
பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங்கம லம்மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேஉன் அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே
Aahaa! Beautifully said.
very nicely said. It is true that periyava is nothing but shiva.