Upachara Patram At Varanasi In 1935

12

ஸ்ரீசங்கரபீடதத்வதர்சனம் பரிசிஷ்டம்

ஸ்ரீமத்பரமஹம்ச பரிவ்ராஜகாசார்யவர்ய ஜகத்குரு
ஸ்ரீமச்சங்கர பகவத்பாதாசார்யாள் அலங்கரித்த ஸ்ரீகாஞ்சீ
காமகோடி பீடத்தில் வீற்றிருக்கும்

ஸ்ரீமத்பரமஹம்ச பரிவ்ராஜகாசார்யவர்ய

ஜகத்குரு ஸ்ரீமச்சந்த்ரசேகரேந்த்ர ஸ்வாமிஹள்

பொற்பாதகமலங்களில்

ஸ்ரீகாசீ நிவாஸிகளான தென்னிந்தியர்ஹளாகிய நாங்கள்
சமர்ப்பிக்கும் உபசார பத்திரம்

பண்டிதர் முதல் பாமரர் வரை புகழ்ந்து வணங்கும் ஸற்குருமணியே !

சாந்தம், தயை, உதாரம், விரக்தி, வித்யாபிமானம், தர்ம ரக்ஷணம் முதலிய சகல குணங்களும் நிறைந்த ஸ்ரீகாஞ்சீகாமகோடி பீடத்தில் வீற்றிருக்கும் ஜகத்குருவாஹிய ஆசார்யாளை வணங்குஹிறோம் !

எங்கள் பூர்வ ஜன்ம பாக்ய விசேஷத்தினாலும், ஸ்ரீத்ரிபுரஸுந்தரீ ஸமேத சந்த்ரமௌளீச்வரரின் அனுக்ரஹத்தினாலும் மனதிற் கெட்டாததும், சொல்லுதற்கரிதும், கட்டிற்கடங்காததும், இதுவரை அனுபவிக்கக் கிடைக்காததுமான ஆனந்தத்தை இப்புனித க்ஷேத்திரத்தில் ஸ்ரீசரணாள் அவர்களின் தர்சனத்தால் நாங்கள் அனுபவித்து நிற்கிறோம் !

லௌகிகவ்யவஹாரங்களால் ஜன்ம பூமியை விட்டு அநேகாயிரம் மைல்ஹளுக்கப்பால் இங்கு வசிக்கும் நாங்கள் இதுவரை பத்ரிகைஹள் மூலமாய் ஸ்ரீசரணாளுடைய உபதேசங்களைப் படித்துத் தெரிந்துக் கொள்வதற்கு முடிந்ததே யல்லாமல் ஸ்ரீசரணாளை நேரில் சந்திக்கும் பாக்கியம் இப்போதுதான் எங்களுக்குக் கிட்டித்து!

சென்ற மூன்று வர்ஷங்களுக்கு முன் ஸ்ரீசரணாள் காசீயாத்திரையாஹ வந்துக்கொண்டிருக்கிற விவரம் கேட்டது முதல் ஸ்ரீசரணாளை இன்று தர்சிப்போம், நாளை தர்சிப்போம் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எங்களது அபிலாஷைகள் இரண்டு மாதங்களுக்கு முன் தான் நிறைவேறிற்று என்று சந்தோஷ செய்தியை இவ்விடத்தில் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை !

குருமணியே!

மலைஹள், வனாந்தரங்கள், நதிஹள், துஷ்ட ம்ருகங்கள் நிறைந்த பாட்டைஹளில் ச்ரமம், பசி, தாஹம், சீதோஷ்ணம் முதலியவைஹளை கொஞ்சமும் பொருட்படுத்தாது, ஸ்ரீசந்த்ரமௌலீச்வரபூஜை, ப்ராஹ்மண ஸந்தர்ப்பணை முதலான தர்மங்களை விமர்சையுடன் நடத்திக்கொண்டு கங்கா யாத்திரையை பிரதான லக்ஷ்யமாஹக்கொண்டு ஸ்ரீசரணாள் இவ்விடம் விஜயமாஹாவிடில் எங்களுக்கு தரிசனம் கிடைப்பதெவ்விதம்? ஈச்வரன் உள்ளன்போடிருக்கும் அந்தரங்க பக்தனுக்கு தானே சென்று தரிசனம் கொடுத்து க்ருதார்த்தனாக்குவதைப்போல் ஸ்ரீசரணாளிடம் பக்தியுடனிருக்கும், ஆனாலே தரிசனம் செய்ய சக்தி இல்லாமலிருந்த எங்களுக்கு தரிசனம் கொடுத்து எங்களை க்ருதார்த்தர்களாக்கினீர்ஹளே !எங்கள் பாக்யம்தான் பாக்யம் !

சனாதன தர்மம் தற்காலம் நடந்துவருஹிற நாகரீகமென்று கருதப்படும் வழக்க ஒழுக்கங்களால் தினே தினே சீர்கேடடைந்துவரும் சமயத்தில் ஸ்ரீயவாளின் யாத்திரையால் லக்ஷக்கணக்கான ஜனங்களுக்கு கிடைத்த ஸ்ரீயவாளின் தரிசனத்தினாலும், ஸ்ரீயவாள் உபதேசிக்கும் அருள்மொழிகளை அவர்ஹள் சிரத்தையுடன் கேட்பதனாலும், ஜனங்கள் ஸனாதன தர்ம மஹிமையை நன்குணர்ந்து சிஷ்டர்களாஹி வருவது, நமது தேசத்திற்கும், நமது ஸமூஹத்திற்கும், நமது மதத்திற்கும், வந்துகொண்டிருக்கும் ஆபத்துஹள் எல்லாம் ஸூர்யனைக் கண்ட பனி போல் நீங்கிவருவதென்பது உண்மை !
உத்திரதேசத்தில் வசிக்கும் எங்களுக்கு மதம், தர்மம் முதலியவைஹளை ரட்சிக்கும் படியான தைர்யமும், ஞானமும், ஊக்கமும் உண்டாஹுமாறு அனுக்ரஹித்தருளவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறோம் !

ஸ்ரீகாசீநிவாஸிஹளானதென்னிந்தியர்ஹள்
பவ வர்ஷம், பங்குனி மாஸம்

( ஸ்ரீகண்ட சாஸ்த்ரி முதலிய ஸ்ரீகாசீநிவாஸிஹளான தென்னிந்தியர்ஹள் 91 நபர்களின் கையெழுத்து )

1

2

3

Courtesy:

http://sankaramathas.blogspot.in/2013/05/blog-post.html

Leave a Comment