நீ திருப்பதியைப் பத்தி எழுதறயா…

Article Courtesy: Balhanuman Blog

1956-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும் மெரினா’ வாக நாடங்களில் பரிமளித்தவர் என்றாலும் பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம். தன் உருக்கமான எழுத்தால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர்.

பரணீதரன் கூறுகிறார்……
bharanidharan

1965-ம் ஆண்டு. ஸ்ரீ மயிலை கற்பகாம்பாள் கல்யாண மண்டபம். விடியற்காலை நாலரை மணி. பெரியவா வெளியே புறப்படுகிறார். இரவு மண்டபத்திலேயே தங்கிவிட்டிருந்த நான், ரெடி பண்ணிக் கொண்டு கூடவே நடக்கிறேன். திரும்பிப் பார்க்கிறார். அருகில் செல்கிறேன். நடந்துகொண்டே பேசுகிறார் பெரியவா.

tirupathi

‘நீ திருப்பதியைப் பத்தி எழுதறயா ?’

‘பெரியவா சொல்றபடி செய்யறேன்.’

‘திருப்பதி இருக்கு பார்…. இது உலகத்திலேயே மகாசக்தி வாய்ந்த, மிக உயர்ந்த க்ஷேத்திரம். மகேஸ்வரன், விஷ்ணு, பிரும்மா, வராஹர், குமரன் இவாளோட சக்திகளும், சப்த மாதாக்களின் சக்திகளும் ஒண்ணா ஒரே இடத்திலே சேர்ந்திருக்கிற இடம் அது. மலை மேல் இருக்கிற பெருமாள் ரொம்ப ரொம்ப சக்தி உள்ளவர். நான் முன்னே காசி யாத்திரை பண்ணினப்ப ஸ்ரீ வேங்கடாசலபதியைத் தரிசனம் பண்ணினேன். கர்ப்பக்கிரஹத்துக்கு உள்ளே போய் பார்க்க அனுமதிச்சா. சுவாமி விக்ரஹத்துக்குப் பின்னாலே போய்க்கூட நன்னா பார்த்தேன்…..’ என்று பெரியவா பழைய நிகழ்ச்சியைக் கூறிக் கொண்டிருந்தபோது தீவிர பக்தர் ஒருவர் வீதியிலேயே நமஸ்காரம் செய்து, தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளும்படிப் பிரார்த்தித்துக் கொண்டார். கவனம் திசை திரும்பியது. திருப்பதியைப் பற்றி ஓர் அரிய பொக்கிஷம் கிடைக்கப் போகிறது என்ற எனது பேராசை நிராசையாயிற்று.

Tirupati2

அதன்பின்னர் இரண்டு மூன்று முறை பெரியவாளிடமிருந்து திருப்பதியைப் பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள முயன்றேன். இயலவில்லை. இருமுறை பெரியவாளுடன் திருமலைக்கு நடந்து செல்லும் நல்வாய்ப்பும் நற்பேறும் எனக்குக் கிட்டியது. முதன்முறை சென்ற போது, திருப்பதி ‘டாபிக்’கைத் தொடங்கினேன். எப்பொழுது எழுதத் தொடங்கலாம் என்று அறிய விரும்பினேன். நேரடியான பதில் கிடைக்கவில்லை.

Tirupathi Perumal BandW

‘நான் முதன் முதல்லே மலைக்குப் போனப்ப, சுவாமி விமான கோபுரத்திலே, மார்க்கண்டேயர் சிவலிங்கதைக் கட்டிண்டிருக்கிற மாதிரியும், சிவபெருமான் எமனை விரட்டற மாதிரியும் ஒரு சிற்பத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கு. ஆனா, அதுக்கப்புறம் விமானத்துக்குப் போட்டிருக்கிற தங்கத் தகட்டுல அந்தச் சிற்பத்தைக் காணோம். நீ ஒண்ணு பண்றயா… வி. எஸ். தியாகராஜ முதலியார் தலைமையிலேதான் அப்ப ஒரு கமிட்டி திருப்பணி பண்ணி விமானத்துக்குத் தங்கத் தகடு போட்டா… திருப்பணி ஆரம்பிக்கறதுக்கு முன்னால விமானத்தை ஒரு போட்டோ எடுத்திருப்பா. அது அவர் கிட்ட இருக்கும். அவர் கிட்ட போய் அந்த போட்டோவைப் பார்த்து, அதுல நான் சொனன சிற்பம் இருக்கான்னு எங்கிட்ட வந்து சொல்லு’ என்று உத்தரவாயிற்று.

திருமலையிலிருந்து திரும்பியதும், வி. எஸ். தியாகராஜ முதலியாரைப் போய்ப் பார்த்து, பெரியவா கூறிய விவரங்களைச் சொன்னேன். அந்த போட்டோ தம்மிடம் இல்லை என்றும் அப்போது ஜி. கே. வேல்தான் புகைப்படங்கள் எடுத்ததாகவும் வி.எஸ்.டி. கூறினார். ஜி.கே. வேல் அவர்களிடம் சென்று வினவினேன். தேடிப் பார்த்துவிட்டு, ‘அந்த நெகடிவ்‘ கிடைக்கவில்லை என்று அவர் கூறி விட்டார். ஏமாற்றத்துடன் திரும்பிய நான், பின்னர் பெரியவாளிடம் அந்த விவரங்களைத் தெரிவித்தேன்.
1969 -ம் ஆண்டில் பெரியவாளுடன் இரண்டாம் முறையாக மலை ஏறிச் சென்றேன். இம்முறை ஓரிரு வார்த்தைகள் பேசியதைத் தவிர, பெரியவா மவுனமாகவே நடந்து வந்ததால், நான் திருப்பதி விஷயத்தைப் பற்றி விண்ணப்பித்துக் கொள்ள முடியவில்லை.

மறுநாள் கோயிலுக்குச் சென்று, தரிசனம் முடித்துத் திரும்பும் போது பெரியவா மீண்டும் ‘விமான மார்க்கண்டேயர்‘ சிற்பத்தைப் பற்றி நினைவு கூர்ந்து, ‘இங்கேயே இருக்கற வயசான பட்டாசாரியார்களைக் கேட்டுப்பாரு. அவாளுக்குத் தெரிந்திருக்கும்’ என்று கூறவே, நான் பல வீடுகளில் ஏறி இறங்கி பலரிடம் விசாரித்துப் பார்த்தேன். ஓரிருவர் ‘அப்படியில்லையே‘ என்று மறுத்தனர். சிலர் ‘பார்த்ததில்லை‘ என்றார்கள். சிலரோ ‘ஞாபகமில்லை‘ என்று கூறி விட்டார்கள். நான் சேகரித்த விவரங்களை பெரியவாளிடம் கூறினேன். அதன் பிறகு திருப்பதி பற்றி பெரியவா என்னிடம் எதும் பேசவில்லை. நானும் அதைப் பற்றி எதும் கேட்காமலே இருந்துவிட்டேன்.

ஆனால், இரண்டாம் முறை திருப்பதி சென்ற போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் நாள்கள் ஆக ஆக… மாதங்கள் செல்ல செல்ல, வருஷங்கள் உருள உருள என்னைப் பெருந் தாக்கத்துக்கு உள்ளாக்கி, என் சொந்த வாழ்விலும், குடும்ப சூழ்நிலையிலும் ஏற்பட்ட மாறுதல்களை மனத் திண்மையோடு எதிர் கொள்ளவும், பின்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அரிய விளக்கங்கள் பெறுவதற்கும் துணை நின்றன. இன்றும் கூட அவை எனக்கு ஞான தீபமாக ஒளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

bt0903_paramacharya

மஹா பெரியவா அருள்வாக்கு : –

ஆண்டவன் நாமம் எது என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஏன் என்றால் இஷ்டதெய்வம் என்று ஒன்று, குலதெய்வம் என்று ஒன்று, இதுபோக ஒவ்வொருவரும் ‘ரொம்ப சக்தி வாய்ந்த சுவாமி’ என்று அவரவர் உணர்வு நிலைக்கேற்ப சுட்டிக் காட்டும் தெய்வங்கள் என்று பல தெய்வங்கள் நம்மிடையே இருக்கிறதே! இதில் எதை தியானிப்பது என்று கேட்கலாம். இம்மட்டில் அவரவர் மனமும் எந்த தெய்வத்திடம் போய் நிற்கிறதோ அதுதான் அவர்கள் தியானிக்க ஏற்ற நாமமாகும். ஆனாலும், அனைவருக்கும் ஏற்ற ஒரு நாமமும் உள்ளது.

கோவிந்த நாமம்தான் அது! ‘கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…’


{ 1 Comment }

  1. says

    Res. .sir,
    prostrations are of mine before I start . Following the footsteps of Maha periyava is Devine . I had the opportunity to walk along with periyava and heard the Anugraha bhashanam many times Sri Bharanidharan sir, is fortunate to write many incidents while traveling with Periyava
    Vai Ramachandran

Leave a Comment